Published Date: September 25, 2023
CATEGORY: CONSTITUENCY
"பெண்களுக்கு தொழில் முனைவோராகும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும்" என அமைச்சர் தியாகராஜன் பேசினார்.
மதுரை மத்திய தொகுதி 59வது வார்டு மகபூப்பாளையத்தில் 'வான்' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தையற்கூடத்தை அவர் துவக்கி வைத்து பேசியதாவது :
தொழில் வணிகத்தில் பெண்கள் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. அவர்கள் வாழ்வாதாரம் மேம்படுவதற்கான தொலைநோக்கு திட்டம் தான் இந்த 'வான்'திட்டம்'. பெண்கள் குழுக்களாக பயிற்சி பெற்று பொருட்களை தயாரித்து சுதந்திரமாக வருவாய் ஈட்டும் வகையில் இந்த திட்டம் அவர்களுக்கு கை கொடுக்கிறது.
பெண்களுக்கு தொழில் முனைவோர் ஆகும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும். மகளிர் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்துகிறது. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் .
தலைமை வகித்த கலெக்டர் சங்கீதா பேசுகையில்," மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.980 கோடி கடன் வழங்கப்படவுள்ளது. தற்போது வரை ரூ 460 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள மகளிர் குழுக்கள் கடன் உதவி பெற்று தொழில் துவங்க முன்வர வேண்டும்" என்றார். மேயர் இந்திராணி பொன் வசந்த், கமிஷனர் பிரவீன் குமார், மண்டல தலைவர் பாண்டி செல்வி, ராஜ்மஹால் இயக்குனர் முருகானந்தம், பி.ஆர்.ஓ.க்கள் ., சாலி தளபதி, மகேஸ்வரன் பங்கேற்றனர்.
Media: Dinamalar